Saturday, 21/9/2019 | 5:12 UTC+0

ஸ்ரீ அலர்மேல்மங்கா பத்மாவதி ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடாசலபதி மற்றும் ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாள் திருக்கோவில்

Alarmelmanga Padmavathy Prasanna Venkadasalapthy Narasimha Perumal Temple

வரலாறு 

ஸ்ரீ வேங்கடாசலபதி மற்றும் இதன் அருகிலுள்ள சிவாலயத்தில் உள்ள திருவாலீசுவரர் என்னும் இரண்டு கோவில்களின் கல்வெட்டுகளும் கீழப்பாவூரை குருமறை நாட்டுப் பாகூரான சத்திரிய சிகாமணி நல்லூர் என்று குறிப்பிடப்படுகின்றன. சத்திரிய சிகாமணி என்பது முதலாம் இராஜஇராசனின் விருதுப் பெயராகும்.

சடையவர்மன் ஸ்ரீ வல்லபன் (கி. பி. 1101 – 1124)
மாறவர்மன் ஸ்ரீ வல்லபன் (கி. பி. 1145 – 1162)
சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் (கி. பி. 1162 – 1177)
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி. பி. 1216 – 1244)
மாறவர்மன் விக்ரமபாண்டியன் (கி. பி. 1218 – 1232)
மாறவர்மன் குலசேகரப்பாண்டியன் (கி. பி. 1268 – 1318)

போன்ற மன்னர்களின் பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. கால வரிசையைக் கணக்கிட்டால் சுமார் 1100 வருடங்கள் பழமை வாய்ந்த ஊராகவும், கோவிலாகவும் திகழ்கின்றது.

ஸ்ரீ வேங்கடாசலபதி பெருமாளின் திருப்பெயர்கள் முனையெதிர் மோகர், முனைமோகர், மோகராழ்வர் என்று அழைக்கப்பட்டுள்ளன. முனையெதிர் மோகர் விண்ணகர், முனைக்கு மோகர் விண்ணகர் மோகராழ்வர், முனைகதிர் மோகர் விண்ணகர் என்று அழைக்கப்பட்டுள்ளன.

அருகிலிருக்கும் சிவாலயத்திலுள்ள மூர்த்தியின் திருப்பெயரை திருக்காவலீஸ்வரமுடைய நாயனார் என்றும் திருக்காவலீஸ்வரமுடையார் என்றும் திருக்கபாலீஸ்வர நாயனார் என்றும் அழைக்கப்பட்டுள்ளன.

திருமடந்தையும் ஜெயமடந்தையும் என்ற சடையவர்மன் ஸ்ரீவல்லபன் மெய்க்கீர்த்தியும் திருமகள் ஐயமகள் என்ற மாறவர்மன் ஸ்ரீவிக்கீரம பாண்டியன் மெய்க்கீர்த்தியும் கல்வெட்டில் காணப்படுகின்றன. நித்யபூஜைகளுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்ட செய்திகள் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன.

கீழப்பாவூர் எல்லைகளாக அறிஞிசிகைப்பிராட்டி சதுர்வேதி மங்கலமும் தெலிங்க குலகால சதுர்வேதி மங்கலமும் குறிக்கப்பட்டுள்ளன. அறிஞ்சய் சோழன் (கி. பி. 956-957) இராசஇராசனின் பாட்டன் ஆவான். அவனது மகள் பெயர் அறிஞ்சிகைபிராட்டி ஆவாள். இவள் பெயரில் அருஞ்சிகைப் பிராட்டி சதுர்வேதி மங்கலம் என்று சூட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீ வேங்கடாசலபதி கோவிலில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் கோழித்தோட்டம் நில எல்லையாக உள்ளது. கோழி என்பது இராஜஇராசனின் சேவற் கோழிப் போரினைக் குறிப்பதாகும். இராஜஇராசனுக்கும் , பாண்டியனுக்கும் சேவற்கோழிப்போர் நடைபெற்றுள்ளது. இராஜஇராசன் காலம் கி. பி. 985-1014 ஆகும். ஆகையால் இவ்வூர் 10ம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாக இருக்க வேண்டும் என்பது கணிக்கப்படுகிறது. தெலிங்க குலகாலன் இராஜஇராசனின் பட்ட பெயராகும்.

பள்ளிச்சந்தம் என்னும் சொல் சமணர், பௌத்தர் கோவில்களுக்கு வரியில்லாமல் நிலங்கள் வழங்கிய செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளன.

திருவாலிச்சுவரர், ஸ்ரீ வேங்கடாசலபதி கோவில்களின் வடக்குப்புறத்தில் முனையெதிர் மோகப்பேரேரி காணப்படுகிறது. இதன் பரப்பளவு சுமார் 260 ஏக்கர் ஆகும். சுமார் 1700 ஏக்கர் பரப்புக் கொண்ட நன்செய் நிலங்களை வழங்க்கொழிக்கச் செய்கின்றது. கீழப்பாவூர் வாய்க்கால் வீரஇராஜேந்திரன் வாய்க்கால் என்று அழைக்கப்பட்டுள்ளது வீரஇராஜேந்திரன் சோழனின் பெயராகும். கல்வெட்டில் பெருந்தேவி வழி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெருந்தேவி சோழனின் கோப்பெருந்தேவியைக் குறிப்பதாக இருக்க வேண்டும். சோழர் காலத்தில் கீழப்பாவூர் குளம் பாகூர் பெருங்குளம் என்று அழைக்கப்பட்டுள்ளது. ஆயன்மடை போக்கியும், பிரன் மடையும் காணப்படுகின்றன.

முனையெதிர் மோகப்பேரேரி, முனையெதிர் மோகர், தென்னவனாபத்துதவிகள் போன்ற பெயரில் போர்ப்படைகள் கீழப்பாவூரில் இருந்துள்ளன.

சோழரின் ஆட்சிக்கும், பாண்டியர் ஆட்சிக்கும் கீழப்பாவூர் உட்பட்டிருந்தது என்பது தெரிகிறது. சோழர்கள் காலத்தில் சத்திரிய சிகாமணி நல்லூர் என்றும் பாண்டியர் காலத்தில் பாகூர் என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது

ஆலயத்தில் வழிபாடு செய்யும் முறை

சத்திரிய சிகாமணி நல்லூர் என்னும் இந்த கீழப்பாவூர் சேத்திரத்தில் முதலில் தெப்பக்குளம் கன்னிமூல ஸ்ரீ கணபதியை வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் ஸ்ரீ அலர்மேல் மங்கா-பத்மாவதி சமேத ஸ்ரீ ப்ரஸன்ன வென்கடாசலபதியை தரிசனம் (வழிபாடு) செய்ய வேண்டும். பின்னர் ஸ்ரீ நரஸிம்ஹருக்கு நீராஞ்சனம் ஏற்றி வாசனை புஷ்பங்களால் பூ மாலை சாற்றி அர்ச்சனை செய்து பானகம், வெற்றிலை, பாக்கு, பழம்,தேங்காய் நிவேதனம் செய்து திருக்கோவிலை 16 முறை பக்தியுடன் ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே வலம் வந்தால் நமது சகல விதமான கஷ்டங்கள் நீங்கி மேன்மை ஏற்படும். ஆகம விதிப்படியும் ஆலய சிற்ப சாஸ்திரப்படியும் ஆலயத்திற்கு ஈசான்ய திசையில் தெப்பக்குளம் அமைவதுதான் முறை. ஆனால் இவ்வாலயத்தில் நரசிம்ஹரின் உக்ரத்தை தணிக்கும் விதமாக ஸ்ரீ நரஸிம்ஹ புஷ்கரணி என்னும் தீர்த்தக்குளம் முன்புறம் அமைந்திருப்பது தனி சிறப்பாகும். இந்த தீர்த்தத்தில் ஸ்ரீ மகா விஷுணுவாகிய ஸ்ரீ நரஸிம்ஹரின் பார்வை படுவதால் தொடர்ந்து புனித நீராடுதல், தீர்த்தத்தை தன் மேல் தெளித்து கொள்ளுதல். ஓம் அச்சுதாய நம, அனந்தாய நம, கோவிந்தாய நம என்ற நாமத்தை சொல்லி கொண்டே தீர்த்தத்தை பருகினால் நமக்கு சரீரம் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கி, ஆத்ம பலம் ஏற்பட்டு சகல விதமான ஐஸ்வர்யம் ஏற்படும் என்பது இந்த ஸ்ரீ நரஸிம்ஹ புஷ்கரணியின் சிறப்பு. மேலும் இவ்வாலயத்தின் அருகில் வாலியால் வழிபாடு செய்யப்பட்ட திருவாலீஸ்வரர் என்னும் சிவாலயம் சென்று வழிபாடு செய்தால் இந்த ஷேத்ர பலன் பரிபூர்ணமாக கிடைக்கும்.

வரைபடம்

About

POST YOUR COMMENTS

Your email address will not be published. Required fields are marked *

வீடியோ