Alwarkurichi Anantharamakrishnan | Nellai Help Line

ஆழ்வார்குறிச்சி மாமேதை அண்ணல் அனந்தராமகிருஷ்ணன்

Specials

கல்வி கண் கொடுத்த ஆழ்வார்குறிச்சி மாமேதை அண்ணல் அனந்தராமகிருஷ்ணன் ..!

ஆழ்வார்குறிச்சி என்ற பெயரை உச்சரித்ததும் அனைவரின் நினைவுக்கு வருவது ஸ்ரீ பரமகல்யாணி கல்வி நிறுவனங்கள். கான்வென்ட் பள்ளிகளுக்கு கூட கிடைக்காத வகுப்பறை கல் கட்டிடங்கள், படிப்பதற்கு ஏற்ப மிக சிறந்த மேசை நாற்காலிகள், காற்றோட்டமாக  மரங்கள் நிறைந்த சுற்றுபுறசூழல், மாணவர்கள் அனைவர்க்கும் நூலகம் கணினி, சுத்திகரிக்கபட்ட பாதுகாப்பான குடிநீர் என அனைத்து வகையான வசதிகளும் உள்ளன

ஸ்ரீ பரமகல்யாணி பெயரில்

  • நர்சரி பள்ளி
  • ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளி
  • ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி
  • ஸ்ரீ பரமகல்யாணி அறிவியல் சுற்றுப்புற சூழல் பல்கலை கழகம்
  • பரமகல்யாணி கல்யாணமண்டபம்
  • பரமகல்யாணி மருத்துவமனை

என எல்லா வசதிகளையும் ஒருங்கே பெற்ற ஊர் தான் ஆழ்வார்குறிச்சி. இதெற்கெல்லாம் காரணமானவர் ஒருவர் மட்டுமே. அவர்தான் அண்ணல் அனந்தராம கிருஷ்ணன்.

ஆழ்வார்குறிச்சி மக்கள் சிலர் கல்வி தந்தை என தனக்கு தானே பெயர் சூட்டிக்கொண்டு கல்வி நிறுவனங்கள் நடத்தி கோடி கோடியாய் கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் மத்தியில் ஒரு ரூபாய் கூட நிதியாக பெறாமல் மூன்று தலைமுறைக்கும் மேலாக ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள மக்களுக்கு சிறப்பான கல்வியை வழங்கும் அண்ணல் அனந்தராமகிருஷ்ணன் அவர்களின் குடும்பர்தாரை வாழ்த்த வார்த்தைகள் இல்லை..!

அண்ணல் அனந்தராம கிருஷ்ணனின் கனவு, தான் பிறந்த சிற்றூரான நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை உலக வரைபடத்தில் பெயர் சொல்லும் வகையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது. ஆழ்வார்குறிச்சியில் பள்ளிக்கூடம், கல்லூரி, மருத்துவமனை என்றெல்லாம் அமைக்க வேண்டும். அங்கே படித்து வெளியேறும் மாணவர்கள் உலகமெல்லாம் தனது சிற்றூரான ஆழ்வார்குறிச்சியின் பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான்.

அ. சிவசைலம் 

1935 ஆம் ஆண்டு சிம்ஸன் அண்ட் கம்பெனி நிறுவனத்தின் மேலாண் இயக்குநரின் அந்தரங்கச் செயலராகப் பணியில் சேர்ந்து, அந்த ஆங்கிலேயரின் நம்பிக்கைக்குரியவராக மாறி, காலனிய ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில், அந்த பிரிட்டிஷ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக அவர் நியமிக்கப்பட்டபோது உலகமே நிமிர்ந்து பார்த்தது. ஆட்சி மாற்றத்திற்கு முன்னால் 1941-ல் ஏற்பட்ட காட்சி மாற்றம் அது. சிம்ஸன் அண்ட் கம்பெனியின் வளர்ச்சி அபரிமிதமானது. “தி மெட்ராஸ் மெயில்’ ஆங்கிலப் பத்திரிகை, “ஹிக்கின்பாதம்ஸ்’ புத்தக விற்பனை நிலையம், அசோசியேடட் பிரஸ் என்கிற நவீன அச்சகம், சிம்ஸன் அண்ட் ஜெனரல் ஃபைனான்ஸ் என்கிற நிதி நிறுவனம், மெட்ராஸ் அட்வர்டைசிங் கம்பெனி என்கிற விளம்பர நிறுவனம், வீல் பிரசிஷன் ஃபோர்ஜிங்ஸ் என்கிற மோட்டார் வாகன நட்டுகள் தயாரிக்கும் நிறுவனம், இந்தியா பிஸ்டன்ஸ் என்கிற மோட்டார் வாகன இஞ்சினுக்கான பிஸ்டன் தயாரிக்கும் நிறுவனம், அடிசன் பெயின்ட்ஸ் என்கிற பெயின்ட் தயாரிப்பு நிறுவனம், “டாஃபே’ என்கிற டிராக்டர் தயாரிப்பு நிறுவனம் என்று தனது வியாபாரப் பார்வையை நாலா திசைகளிலும் படரவிட்டு ஒரு மிகப்பெரிய ஆலமரமாக “அமால்கமேஷன்ஸ்’ என்கிற பெயரில் கிளைவிட்டுப் பரவி இருந்தது.

சிம்ஸன்’ அனந்தராமகிருஷ்ணன் என்கிற பெயர் அரை நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழகத்தில் ஆச்சரியத்துடனும், மரியாதையுடனும் உச்சரிக்கப்பட்ட பெயர். 59 வயதில் “சிம்ஸன்’ அனந்தராமகிருஷ்ணன் மறைந்தபோது, இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர் மறைந்தார் என்று வர்ணித்தவர்கள் பலர். உழைப்பால் உயர்ந்த உத்தமர் மறைந்தார் என்று வருத்தப்பட்டவர்கள் பலர். சமூக சிந்தனையுடன் கூடிய பணக்காரர் என்று இரங்கல் அறிக்கை வெளியிட்டவர்கள் பலர். அந்த மாமனிதருக்குச் சூட்டப்பட்ட அத்தனை புகழாரங்களும் இப்போது நம்மை விட்டுப் பிரிந்திருக்கும் அவரது மகன் அ. சிவசைலத்துக்கும் பொருத்தமான புகழாரம் என்பதுதான் சிறப்பு.

தனது தந்தையின் கனவுகளை நனவாக்கிய தனயன் சிவசைலம்’ என்பதுதான் அவரது தனிச்சிறப்பு. அண்ணல் அனந்தராமகிருஷ்ணன் அவர்களுக்கு நட்பு வட்டாரத்தில் ஜெ என்ற செல்ல பெயரும் உண்டு.! 59 வயதில் “ஜெ’ மறைந்தபோது அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கனவுகளைச் சுமந்து கொண்டு இருந்தாரோ அந்தக் கனவுகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றத் தொடங்கினார் சிவசைலம்.

1964-ல் தமது 59-வது வயதில், ‘ஜெ’ என்று உலகம் போற்றிய அனந்தராமகிருஷ்ணன் என்கிற வியாபார மேதை மறைந்தபோது, இனி அமால்கமேஷன்ஸ் என்ன ஆகுமோ என்று சந்தேகப்பட்டவர்கள் பலர். அத்தனை பேர்களின் சந்தேகங்களையும் தகர்த்தெறிந்து, அந்த நிறுவனத்தை இன்று ஒரு பன்னாட்டு நிறுவனமாக உயர்த்தி இருப்பதன் பின்னால் அ. சிவசைலத்தின் உழைப்பும், சாதுர்யமும் நிறையவே இருக்கிறது. அனந்தராமகிருஷ்ணன் ஒரு விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர். நவீன இந்தியா உலக நாடுகளைப் போல விவசாயத்திலும் விஞ்ஞான வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்பியவர். “டாஃபே’ என்கிற நிறுவனத்தை 1960-ல் நிறுவி, டிராக்டர்கள் உற்பத்தியில் இறங்கியது அமால்கமேஷன்ஸ். “டாஃபே’ தொடங்கிய நான்காண்டுகளில் ‘ஜெ’ காலமானதைத் தொடர்ந்து, அதை நிர்வகித்தது மட்டுமல்ல இன்று ஆண்டொன்றுக்கு 1 லட்சம் டிராக்டர்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய டிராக்டர் நிறுவனமாக உயர்த்திய பெருமையும் அ.சிவசைலத்தைத்தான் சாரும். இன்று மட்டும் “அமால்கமேஷன்ஸ்’ குழுமத்தில் 43 நிறுவனங்கள் அடக்கம். 12,000 ஊழியர்களுக்கு மேல் பணிபுரிகிறார்கள். ”

சிவசைலத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசைல நாதர், ஸ்ரீ பரமகல்யாணி திருக்கோவில் உள்ளே வெளியே என எங்கு பார்த்தாலும் ஒவ்வொரு பொருளும் அண்ணல் அனந்த ராமகிருஷ்ணன் குடும்பத்தாரின் பெயரை மறைமுகமாக சொல்லி கொண்டு இருப்பதை கோவிலை பற்றி முழுமையாக தெரிந்தோர் அறிவர். கோவிலுக்கு எந்த தேவை என்றாலும் முதல் ஆளாய் செய்து முடிக்கின்றனர்,

இந்த கல்வி நிறுவனக்களில் பயின்ற இலட்சகணக்கான  மாணவர்கள் உலகம் எங்கும் நல்ல நிலையில் பரவி கிடக்கின்றனர். அந்த வரிசையில் முத்துக்குமார் – சுப்புக்குட்டியும் ஒருவர். அங்கு படிக்கும் மாணவர்கள் மேல் முழு கவனம் செலுத்தி வாழ்வாங்கு வாழவைக்கும் அண்ணல் அனந்த ராமகிருஷ்ணன் குடும்பத்தாரை நேரில் அடையாளம் கண்டோர் வெகு சிலரே பகட்டும் பாராட்டுக்கும் அப்பாற்பட்டவர்களாக இன்றளவும் இருக்கின்றனர்… !

எழுத்தை அறிவித்தவன் இறைவன் ஆவான் – ஆழ்வார்குறிச்சியில்  இலவசமாய் கல்வி கண் கொடுத்த அந்த மகானுக்கு இதுவரை எந்த மாணவனும், எந்த ஆசிரியரும் அவர்களுககாக யாரும் எந்த பிரதிபலனும் செய்ததில்லை…!

கோடிகள் புரளும் வியாபாரமாக இந்த கல்வி ஆக்கும் மனிதர்கள் மத்தியில் ஆழ்வார்குறிச்சியில் சுற்றுப்புற மக்களின் நலனுக்காக ஒழுக்கமான கல்வி, தரமான கல்வியை இலவசமாக அளித்து வரும் அண்ணல் அனந்த இராமகிருஷ்ணன் அவர்களின் குடும்பாத்தாரின் இந்த சேவை மிகப்பெரியது.!

அவர்களை மனதார வாழ்த்தும் அவர்களால் நல்ல நிலை பெற்ற ஒரு விவசாய கூலி தொழிலாளி மகனுக்கு  இப்பதிவு சமர்ப்பணம்..!

-நன்றி கிருஷ்ணகுமார்

Leave a Reply