நெல்லையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

செய்திகள்

நெல்லை டவுன் பாட்டப்பத்து, தேவிபுரம் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை, மேலும் வினியோகம் செய்யப்படும் குடிநீரும் சாக்கடை கலந்து வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் நெல்லை டவுன் கல்லணை மேல்நிலைப்பள்ளி முன்பு அந்த பகுதி மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் கலங்கலான தண்ணீரை பாட்டிலில் அடைத்து கையில் வைத்து இருந்தனர். திடீர் மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தொடர்பாக தகவல் அறிந்த நெல்லை மாநகராட்சி நெல்லை மண்டல உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில், “பாட்டப்பத்து பகுதியில் குடிநீர் குழாய் பராமரிக்கும் பணி நடந்து வருவதால் தண்ணீர் கலங்கலாக வருகிறது. விரைவில் பராமரிப்பு பணியை முடித்து விடுவோம். அதன்பிறகும் தண்ணீர் கலங்கலாக வந்தால், மேல் நடவடிக்கை எடுப்போம். லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும்” என்றார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, விட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply