வடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது
January 11, 2018
வடக்கு விஜயநாராயணம் மனோன்மணீசுவரர் கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்த மனுநீதிநாள் முகாமில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் வரவேற்றார்.
மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்த முகாமில், ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 125 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கலெக்டர் சந்தீப் பேசியதாவது:–
மாவட்டம் முழுவதும் இதுபோன்ற மனுநீதிநாள் முகாம்கள் நடத்தும்போது தான் அரசின் திட்டங்கள் அந்தந்த துறை அதிகாரிகள் மூலம் பொதுமக்களுக்கு தெரியவருகிறது. கடந்த மாதம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 98 மனுக்களில் 71 மனுக்களுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. மொத்தம் 42 துறைகளில் உள்ள மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்படுகிறது.
தமிழக அரசின் பொங்கல் பொருட்கள் வருகிற 18–ந் தேதி வரை வழங்கப்படும். இலவச வேட்டி– சேலைகளும் வழங்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை மூலம் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. சிறுபான்மைத்துறை மூலம் கல்விக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு நலஉதவிகள் வழங்கப்படுகின்றன. கல்வித்துறை மூலம் படிக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.
POST YOUR COMMENTS