Sivanthipuram people protest against the opening of the tasmack

சிவந்திபுரத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

செய்திகள்

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் கஸ்பாவுக்கு தெற்குப்பகுதியில் ஆற்றுக்கு செல்லும் பாதையில் தனியார் இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அங்கு டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட இருப்பதாக இருந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை டாஸ்மாக் கடை கட்டிடம் அமைக்கப்பட்டு உள்ள பாதையில் திரண்டு, டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் போலீசார் அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும், இங்கு டாஸ்மாக் திறக்கப்பட உள்ளதாக எந்த தகவலும் இல்லை என்று கூறினர்.
அதற்கு பொதுமக்கள், எங்களுக்கு தகவல் தெரிந்துதான் நாங்கள் இங்கு கூடி உள்ளோம். இந்த பாதை வழியாக தான் நாங்கள் பழைய பாபநாசம் கோவிலுக்கு செல்ல வேண்டும். வயல்கள் மற்றும் ஆற்றுக்கு குளிக்க செல்ல வேண்டும் என்றாலும் இந்த பாதையை தான் பயன்படுத்துகிறோம். இங்கு டாஸ்மாக் கடை வந்தால் இந்த வழியாக செல்லும் பெண்கள் உள்ளிட்டோருக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு டாஸ்மாக் கடை திறக்க வேண்டாம் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply