நெல்லையில் IT Companyயை உருவாக்கும் தனி ஒருவன்

நெல்லை வி ஐ பி, பொது

நமது மாவட்டத்து மக்களுக்காக ஒரு பெரிய IT Companyயை உருவாக்கிய நபரை பற்றி தான் இன்றைய VIP பகுதியில் நாம் பார்க்க இருக்கிறோம் .

என்ன நம்ப முடியவில்லையா?

நம்பி தான் ஆக வேண்டும்.

ஆம் அவர் தான் பிரபாகரன் முருகையா.

நமது மாவட்டத்தின் மேற்குதொடர்ச்சிமலையை ஒட்டி ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழஆம்பூரை சேர்ந்தவர் பிரபாகரன் முருகையா. இவரது தந்தை முருகையா, விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள மதுரா கோட்ஸ் ஆலையில் தொழிலாளியாகபணியாற்றியவர். பிரபாகரன், ஆழ்வார்குறிச்சி பரமக்கல்யாணி பள்ளியில் படிப்பை முடித்தவர், கோவில்பட்டி இன்ஜினியரிங் கல்லூரியில் 1993ல் எலட்க்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் முடித்தார்.

வழக்கம்போல சென்னை, பெங்களூரு என பல்வேறு நகரங்களிலும் பல்வேறு பணிகளில் இருந்துள்ளார்.பின்னர் சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரின் கனவைப் போலவே இவரும் 1998ல்அமெரிக்கா சென்றார். அங்கும் தமது திறமைக்கு தக்கபடி வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். பின்னர் கார்ப் டு கார்ப் என்ற பெயரில் ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளார்.அமெரிக்காவில் வேலைதேடுவோர், இவர்களிடம் பதிவு செய்து உடனடியாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகிறார்.

இதற்காக திருநெல்வேலியில் சில ஆண்டுகளுக்கு முன்பே தமது நிறுவனத்தை துவக்கிவிட்டார். நெல்லை மையத்தில் சுமார் 60 பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள்தான் இரவில் , அமெரிக்கரின் போன்கால்களுக்கு பதிலளித்து அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை வழங்கிவருகின்றனர். ஒரு ஆண்டில் 30 லட்சம் பேர் இவரது இணையசேவையை பயன்படுத்தியுள்ளனர்.

Tiliconveli IT Company Tirunelveli | Nellai Help Line

சுமார் 60 பேர் பணியாற்றும் இவரது நிறுவனத்தை ஆயிரம் பேர் பணியாற்றும் நிறுவனமாக மாற்றும்முயற்சியில் நெல்லையில் அரசு இன்ஜினியரிங் கல்லூரிக்கு அருகே திலிகான்வேலி நிறுவனத்தை நேற்று துவக்கினார். துவக்க விழாவில் தமது தாய், தந்தை, அவரது மனைவியின் தாய், தந்தை மற்றும் தமது மகள்கள், உறவினர்கள்,நண்பர்கள், சாப்ட்வேர் துறையில் பணியாற்றுவோர் என நண்பர்களைக்கொண்டே துவக்க விழா நடந்தது.

துவக்க விழாவில் பிரபாகரன் பேசுகையில்,ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் இரண்டு நாட்கள் முக்கியமானவை.ஒன்று பிறந்த தினம்,இன்னொன்று வாழ்க்கையில் நினைத்ததை சாதித்த தினம்.அந்த வகையில் நெல்லையில் இத்தனை பொருட்செலவில் நாங்கள் இந்த நிறுவனத்தை துவக்கிய தினம்தான் என்றார்..

நெல்லையில் நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா, கங்கை கொண்டான் சிப்காட் வளாகம் என அரசாங்கங்களே பல்வேறு திட்டமிட்டும் சாப்ட்வேர் நிறுவனங்களோ, தொழில்நிறுவனங்களோ வராத நிலையில் நீங்கள் தனிஒரு நபராக வேலைவாய்ப்பிற்காக இத்தனை பெரிய நிறுவனத்தை துவக்குவதின் அடிப்படை உந்துததல் எது?
இப்போது டாஸ்மாக் மதுபானம் இருப்பதுபோல, நான் சிறுவனாக இருந்தபோது,’சுவர்முட்டி’ எனும் ஒரு மதுபானம் கடைகளில் விற்கப்படும். அதனை குடித்துவிட்டு அங்குமிங்குமாக உழன்று கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு ஒழுங்காக வேலைவாய்ப்புகள் இருந்தால் இத்தகையபாதைக்கு செல்லமாட்டார்கள் என பெரியவர்கள் கூற கேள்விப்பட்டிருக்கிறேன்..மேலும் நான் அமெரிக்காவில் இருந்தாலும் என் பேச்சின் நெல்லை தமிழ் மாறாது. நான் எப்போதும் சொந்தஊரப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பேன். என்னைப்போல ஆஸ்திரேலியாவில், சிங்கப்பூரில், அமெரிக்காவில் தொழில்நடத்தும் நெல்லையை சேர்ந்தவர்களுக்கும் இத்தகைய தொழிலை நெல்லையில் துவக்க வேண்டும்என்ற எண்ணம் உள்ளது. இதனை நான் பலரிடமும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் முயற்சியில் இறங்கிவிட்டேன். இதனை கேள்விப்பட்ட ஆஸ்திரேலியா நண்பர் ஒருவர், தாம் தொழில்துவங்குவதற்காக வாங்கிப்போட்ட 50 ஏக்கர் நிலத்தை தருவதாக சொன்னார். எனவே இதெல்லாம் சொந்த ஊரின் மீதான பற்றுதல்தான் காரணம்.

நெல்லையில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு சாத்தியமா?
நெல்லையை சேர்ந்தவர்கள் நிறையப்பேர் பெங்களூருவில், சென்னையில் பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலைகிடைத்தும் சூழல் பிடிக்காமல் நெல்லையில் வசிக்கின்றனர்.அவர்கள் வரத்து வங்கியுள்ளனர். இந்த வளாகத்தில் 30 ஆயிரம் சதுரஅடியில் அலுவலகம் அமைத்துள்ளேன். எங்கள் நிறுவனம் மட்டுமல்லாது எங்களைப்போல தொழில்துவங்க ஆர்வமுள்ள,ஆனால் இடவசதியோ, பணியாட்கள் வசதியோ இல்லாதவர்களுக்கும் இங்கு வாய்ப்பளிக்கிறோம். எனவே இதே வளாகத்தில் பல்வேறு நிறுவனங்கள் துவங்க வாய்ப்புள்ளது.

நெல்லையில் தொழில் துவங்குவதில் உள்ள சிரமங்களை அறிந்த பிரபாகரன், தமது குறிக்கோளாக மூன்று விஷயங்களைபகிர்ந்துகொண்டார். எங்கள் நிறுவனத்தின் மூலம் சமூகத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் தருவதை அடிப்படையாக கொண்டுள்ளார். நிறுவனம் துவங்கிய முதல்நாளிலேயே,நெல்லை மாவட்டம் ஆய்க்குடியில் அமைந்துள்ள அமர்சேவா சங்கத்தில் படித்துமுடித்த சக்கர நாற்காலிகளில்சுழலும் மாற்றுத்திறனாளிகள் பத்துபேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார்.மேலும் சாப்ட்வேர் பணியில் சேருவோருக்கு அமெரிக்காவில் இருந்தபடி ஆன்லைனில் பயிற்சிகள் வழங்கவும்,அங்கிருந்து பயிற்சியாளர்களை வரவழைத்து பயிற்சிகள் தர உள்ளதாகவும் தெரிவித்தார். பெரிய நிறுவனமான எச்.சி.எல்.,கம்ப்யூட்டர் சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ள ஷிவ் நாடார் நெல்லை மண்ணை சேர்ந்தவர்தான்.அவரும் தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவுவதாக தெரிவித்துள்ளார். எனவே தென்மாவட்டங்களில் பிறந்து தமது மாவட்டத்தில் தொழில்வளர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என எண்ணம் கொண்டவர்களுடன் பேசிவருகிறேன்.இதன்மூலம் துவக்கத்தில் ஆயிரம் பேருக்குவேலைவாய்ப்பு என்பது இன்னும் பல்கிபெருகும் வாய்ப்புள்ளது என்றார்.

அடுத்தக்கட்ட திட்டமாக என்ன செய்யப்போகிறீர்கள்?
நான் அமெரிக்காவில் தற்போது நடத்திவரும் டெக்பெட்ச் நிறுவனத்தை அங்கிருந்துதான் நடத்த உள்ளேன். நெல்லையில் திலிகான்வேலி நிறுவனத்தை சாப்ட்வேர் மையமாக மட்டுமன்றிதொடர்ந்து ஐ.டி.,மற்றும் ஐ.டி.,இ.எஸ்.,கல்வி, மருத்துவம் என விரிவுபடுத்த உள்ளோம். 2010ல்தான் நெல்லையில் இத்தகைய மையம் ஏற்படுத்தவேண்டும் என நினைத்தேன். பார்க்கிறவர்களிடம் எல்லாம் இதைப்பற்றி பேசியிருக்கிறேன். எனவே நான் சும்மா இருந்தாலும் அவர்கள் சும்மா இருக்கமாட்டார்கள். இந்த தொழில்வளர்ச்சியடையும்.

குடும்பத்தை பற்றி?
எனது மனைவி தீபா, இன்ஜினியர் என்பதால், அமெரிக்காவில் நடத்தும் கம்பெனியின் முழுப்பொறுப்பையும் அவரே மேற்கொள்கிறார். மூத்த மகள் ஸ்வேதா பிளஸ்ஒன் பயில்கிறார். இளைய மகள் சஞ்ஜீதா ஏழாம் வகுப்பு பயில்கிறார். மூத்த மகள் ஸ்வேதா, அமெரிக்காவில் 4 மற்றும் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக கம்ப்யூட்டர் பயிற்சி பெறுவது குறித்த புரோக்கிராம் ஒன்றை தயாரித்து அளித்தார். அங்குள்ள பல்வேறு பள்ளிகளில் அந்த திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்கிறார்கள். இதற்காக கடந்த ஆண்டு அதிபர் ஒபாமாவிடம் வெள்ளை மாளிகை விருது பெற்றார். நான் இந்த நிறுவனத்தை துவக்கவேண்டும் என திட்டமிட்டபோதே, அதனை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களை கொண்டு திறக்கவேண்டும் என திட்டமிட்டேன். அவரிடம் இதுதொடர்பாக முன்பு நிறைய முறை பேசியிருக்கிறேன். அவரும் நிறுவனம் துவக்கும்போது கண்டிப்பாக வருவதாக கூறியிருந்தார். ஆனால் காலம் அதற்கான வாய்ப்பை மறுத்துள்ளது. இருப்பினும் இன்றைய நிகழ்வை அவரது நினைப்போடுதான் துவக்கியிருக்கிறேன் என்றார் பிரபாகரன்.

வாழ்த்துகள் பிரபாகரன் முருகையா சார்

9 comments

Leave a Reply to Winston Cancel reply